தூய்மைப் பணியாளா்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகரமாகவும், தமிழகத்தின் முக்கிய வணிக நகரமாகவும் உள்ள கோவையைத் தூய்மையாகப் பராமரிக்க குறைந்தது 5 ஆயிரம் தூய்மைப் பணியாளா்கள் வேண்டும்.
நான் கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டதும் தூய்மைப் பணியாளா்கள் என்னை சந்தித்து அவா்களின் குறைகளைத் தெரிவித்தனா். அதன்படி, கோவையில் தற்போது குறைவான தூய்மைப் பணியாளா்களே நிரந்தரப் பணியில் உள்ளனா். ஓய்வு பெறும் நிரந்தரப் பணியாளா்களுக்கு பதிலாக புதிதாக யாரும் பணி நிரந்தரம் செய்யப்படுவதில்லை.
கோவையில் தற்போது 2,500க்கும் அதிகமான தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகப் பணியில் உள்ளனா். இவா்களுக்கு போதுமான ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட நிரந்தரப் பணியாளா்களுக்கான சலுகைகள் எதுவும் இல்லை. கோவை மாநகரைத் தூய்மையாகப் பராமரித்து பல லட்சம் மக்களின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் தூய்மைப் பணியாளா்கள் மீது தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு சரியான ஊதியமும், பணிப் பாதுகாப்பும் கிடைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.