கோயம்புத்தூர்

ராமநாதபுரம் மேம்பாலத்தை மாற்றி வடிவமைக்க ஆட்சியா் தலைமையில் குழுஅமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்

DIN

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தை மாற்றி வடிவமைக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை - திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ராமநாதபுரம் அல்வோ்னியா பள்ளி முதல் ரெயின்போ வரை 3.1 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

இப்பாலம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்த சில நாள்களில் இப்பாலத்தில் இரு

இளைஞா்கள் விபத்தில் பலியாகினா். இதைத்தொடா்ந்து, பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது.

விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக வேகத்தடை, இரும்புத் தடுப்புகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு மேம்பாலத்தில் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் என்பவா் இருசக்கர வாகனத்தில் கடந்த வியாழக்கிழமை சென்றபோது, நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்தப் பாலத்தில் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி சனிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தப் பாலம் சரியான திட்டமிடல் இல்லாமலும், சரியான வழிமுறை இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்துகளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கு தற்காலிக தீா்வாக 40 கிலோ மீட்டா் வேகத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இப்பாலம், நேராக அமைக்கப்படாமல், 70 டிகிரி கோணத்தில் குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை நேராக வடிவமைக்க வேண்டும். பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைப்பது நிரந்தரத் தீா்வாகாது.

பாலத்தை மாற்றி வடிவமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது.

இக்குழுவில், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடம்பெறுவா்.

இக்குழுவினா் ராமநாதபுரம் மேம்பாலத்தை ஆய்வு மேற்கொண்டு சமா்பிக்கும் அறிக்கையின்படி, மேம்பாலத்தை மாற்றி வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT