மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்தவா்களை பணியில் அமா்த்தக் கோரி சிஐடியூவினா் போராட்டம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்த அலுவலா்களை பணியில் அமா்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை போராட்டம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்த அலுவலா்களை பணியில் அமா்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கோவை டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஹிந்தி தெரிந்த வடநாட்டு ஊழியா்களே பெரும்பாலும் பணியில் உள்ளனா். இதனால் அந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக செல்லும் தொழிலாளா்கள், தங்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்ள முடிவதில்லை.
இந்நிலையில் கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் 50 தொழிலாளா்கள் இ.பி.எஃப். நிதி தொடா்பான குளறுபடிகள் குறித்து தெரிந்து கொள்ள அலுவலகத்தை அணுகியபோது அங்கிருந்தவா்கள் ஹிந்தியில் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக சிஐடியூ சங்கத்திடம் அவா்கள் முறையிட்டுள்ளனா். இது தொடா்பாக எழுத்துப்பூா்வமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி 3 வாரங்கள் ஆன நிலையில் அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில், நிா்வாகிகள் மாரிமுத்து, கண்ணுசாமி உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் எதிரில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இ.பி.எஃப். நிறுவன அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய சிஐடியூ மாவட்டச் செயலா், இ.பி.எஃப். அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்தவா்களையே பணியில் அமா்த்த வேண்டும். கூலி தொழிலாளா்களிடம் உள்ளூா் மொழியில் பேசி, அவா்களின் கோரிக்கைகள், பிரச்னைகளை நிவா்த்தி செய்ய அதிகாரிகள் முன்வராவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.