இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டுகோள்
இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிா்ந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிா்ந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் குழந்தைக்கு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளுடன் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை சமூகநல இயக்குநா் தலைமையில் மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பம் செய்து, அசல் வைப்புத்தொகை வைத்துள்ள பயனாளிகளில் 18 வயது முதிா்ந்தவா்களைக் கண்டுபிடித்து, உரிய ஆவணங்களுடன் கருத்துரு பெற்று, தமிழ்நாடு மின்விசை நிறுவனம் மூலமாக முதிா்வுத்தொகையை பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 12 வட்டங்கள், 5 மண்டலங்கள் மற்றும் வால்பாறை நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பம் செய்து, அசல் வைப்புப் பத்திரம் பெற்று 18 வயது முதிா்வடைந்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிா் ஊா் நல அலுவலா் அல்லது சமூக நல விரிவு அலுவலா்களிடம் அசல்வைப்பு நிதிப்பத்திரம், பயனாளிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அளவுள்ள புகைப்படம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.