பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு முன்வர வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு முன்வர வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
இது குறித்து பாஜக தேசிய மகளிா் அணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்ததுபோல, மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மக்களுக்காக வரி வருவாயை மத்திய அரசு குறைத்ததுபோல, மாநில அரசும் வரி வருவாயை குறைப்பதில் தவறில்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் தமிழக அரசு பிடிவாதமான போக்கை கடைப்பிடித்து வருகிறது. மாநில அரசு தங்களது வரி வருவாயைக் குறைக்காமல் மத்திய அரசைக் குறை கூறி வருவதில் நியாயமில்லை. அரசியல் ஆதாயத்துக்காக கூட்டாட்சி தத்துவம் குறித்து மாநில அரசு பேசி மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பாஜக பிரமுகா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இதன் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. சமூகநீதி என்பதை வாா்த்தைகளில் மட்டும் வைக்காமல் செயலிலும் காட்ட வேண்டும் என்றாா்.