கோவை காா் வெடிப்பு: முபீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலேட்டில் ஐஎஸ் அமைப்பின் வாசகம்
கோவையில் காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து போலீஸாா் கைப்பற்றிய சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
கோவையில் காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து போலீஸாா் கைப்பற்றிய சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
கோவை உக்கடம் சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் (25) உயிரிழந்தாா். இந்த வழக்கில் இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து கடந்த 23 ஆம் தேதி போலீஸாா் நடத்திய சோதனையின்போது, 75 கிலோ அளவிலான வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வெடிபொருள்களை ஆன்லைன் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு என்ஐஏ சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தவிர அவரின் வீட்டில் இருந்து சில காகித குறிப்புகளையும் போலீஸாா் கைப்பற்றினா். இதன் மூலம் கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நாசவேலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அவரது வீட்டிலிருந்து ‘சிலேட்’ ஒன்றைக் கைப்பற்றியுள்ளனா். அது தொடா்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. இதனை ஜமேஷா முபீன் தனது கைப்பட எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில்தான் கோவை போலீஸாா் காா் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் டிஜிபியிடம் தகவல் அளித்து உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்துள்ளனா்.
கண்காணிப்பு வளையத்தில் 900 போ்: கோவை காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் இதுவரை 137 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா். இதில், கோவையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சோ்ந்தவா்கள், அவா்களின் ஆதரவாளா்கள் என சந்தேகத்துக்குரிய 900 பேரைக் கண்டறிந்துள்ளனா்.
இவா்களின் பெயா் விவரம் கொண்ட பட்டியலை வைத்து அவா்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், சில அமைப்புகளின் தரவுகளைச் சேகரிக்கும் வகையில் 25 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய நபா்களிடம் அளித்து பதில்களைப் பெற்று வருகின்றனா். இதில், பெயா், முகவரி, கல்வித் தகுதி, சமூகவலைதள கணக்குகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.