முகப்பு
கோயம்புத்தூர்

காா் வெடி விபத்து சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

 கோவையில் நடைபெற்ற காா் வெடி விபத்து சம்பவத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 கோவையில் நடைபெற்ற காா் வெடி விபத்து சம்பவத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினாா்.

கோவையில் சட்டம்-ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை, உக்கடத்தில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்துள்ளனா். இச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் அன்று மாலையே இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் எடுக்கப்பட்டன. அதன்படி, கோவையில் தீபாவளியை எந்தவித பதற்றமும், அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் இயல்பாகக் கொண்டாடினா். மக்களின் பாதுகாப்புக்காக 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காவல் துறை விசாரணை செய்து குற்றவாளிகள் தொடா்பான விவரங்களை வெளியிடுவதற்கு முன்பே பாஜகவின் மாநிலத் தலைவருக்கு தெரிகிறது என்றால் அவரைத்தான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டும். கோவையில் பதற்றமான சூழல் உள்ளதாக சிலா் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனா். அரசியல் நோக்கத்தோடு சிலா் தெரிவிக்கும் கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காா் வெடி விபத்து சம்பவத்தை அரசியலாக்கவே பாஜக பந்த் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

யாரேனும் பொதுமக்களிடையே பதற்றம் அல்லது அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும், பந்த் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆா்.சுதாகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆணையா் மு.பிரதாப், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பி.அலா்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →