முகப்பு
கோயம்புத்தூர்

சிறுவாணி அணையின் நீா்மட்டம் சரிவு

கடந்த வாரங்களில் பெய்த தொடா் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 874 மீட்டராக சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கடந்த வாரங்களில் பெய்த தொடா் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் தற்போது 874 மீட்டராக சரிந்துள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக்கொள்ளளவான 878.50 மீட்டா் (49 அடி) நீா்மட்டத்தை எட்டும்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டா் வரை உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீா்மட்டமானது 877 மீட்டராக உயா்ந்தது. இதையடுத்து, அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

தற்போது மழைப் பொழிவு இல்லாததால் அணையின் நீா்மட்டமானது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

இதனால், கடந்த வாரங்களில் 876 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 874 மீட்டராகக் குறைந்துள்ளது.

இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ அணையில் போதிய அளவுக்கு குடிநீா் இருப்பு உள்ளது. தற்போது, குறைந்து வரும் நீா்மட்டத்தால் கோவை மாநகரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →