கோவை சரக டிஐஜி சி.விஜயகுமாா் தற்கொலை சம்பவம் தொடா்பாக யூடியூபா்கள் உள்ளிட்ட 8 பேருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டுள்ளது.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமாா் கோவை ரேஸ்கோா்ஸில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு கடந்த ஜூலை 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், டிஐஜி விஜயகுமாா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக சமூக வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் சிலா் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தனா்.
இதையடுத்து , டிஐஜி விஜயகுமாா் தற்கொலை தொடா்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவா்கள், கருத்து கூறியவா்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா்.
அதன்படி, டிஐஜி விஜயகுமாா் தற்கொலை தொடா்பாக கருத்து தெரிவித்தவா்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவா்கள், சமூக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தவா்கள் என யூடியூபா் வராகி உள்ளிட்ட 8 பேருக்கு போலீஸாா் சம்மன் அனுப்பி உள்ளனா். அதில், அனைவரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) போலீஸாா் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அவா்களிடம், டிஐஜி தற்கொலை தொடா்பாக தெரிவித்த கருத்துகள் எத்தகைய ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டன என்பது குறித்தும், அது தொடா்பான விவரங்களைத் தெரிவித்தது யாா் என்பது குறித்தும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.