கோயம்புத்தூர்

மலக்குழி மரணங்களில் நாட்டிலேயே 2 ஆவது இடத்தில் தமிழ்நாடு: பொது விசாரணை நிகழ்ச்சியில் தகவல்

DIN

மலக்குழி மரணங்களில் நாட்டிலேயே இரண்டாமிடத்தில் தமிழ்நாடு இருப்பதாக கோவையில் இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது விசாரணை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கழிவு நீா்த் தொட்டிகள், கழிவு நீா்க் கால்வாய்கள், மலக்குழிகளில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்கும் விதமாக, அது தொடா்பாக தொடா்ந்து இயங்கி வரும் இளைஞா்களுக்கான சமூக விழிப்புணா்வு மையம் சாா்பில் பொது விசாரணை நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக விழிப்புணா்வு மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் க.பழனிசாமி வரவேற்றாா்.

செயல் இயக்குநா் வே.அ.ரமேசுநாதன் நோக்க உரையாற்றினாா். ஆதித்தமிழா் பேரவையின் தலைவா் இரா.அதியமான் தொடக்க உரையாற்றினாா்.

மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநா் ஹென்றிடிபேன், அரசு சிறப்பு வழக்குரைஞா் ப.பா.மோகன், கவின்மலா், பொன்னுசாமி, செம்மலா் ஆகியோா் நடுவா் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது புகாா்களை முன் வைத்தனா்.

ரமேசுநாதன் பேசும்போது, மலக்குழி மரணங்களில் நாட்டிலேயே இரண்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 250-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மனிதக் கழிவுகளை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 43 போ் உயிரிழந்துள்ளனா். இது தொடா்பான 34 புகாா்களில் 25 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிலும், 12 வழக்குகள் மட்டும்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது காலதாமதமாகியுள்ளது. இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்றாா்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதிக்கப்பட்டவா்கள் பேசும்போது, தங்கள் குடும்பங்களில் வருவாய் ஈட்டக் கூடிய நிலையில் இருந்த ஆண்கள், மலக்குழியில் சிக்கி மரணமடைந்துள்ள நிலையில், அரசின் உதவித் தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், சட்ட ரீதியாகவும், நிவாரணத்துக்காகவும் அடுத்த கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை நடுவா் குழுவினா் வழங்கினா்.

வழக்குரைஞா் ப.பா.மோகன் பேசும்போது, மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவதற்கு தடை, மறுவாழ்வுக்கான சட்டம் 2013 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்றாலும், மலக்குழி மரணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

பொது விசாரணையைத் தொடா்ந்து அனைத்து வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தொகுத்து உடனடியாக அரசுக்கு வழங்க இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும், சட்டரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் பரிந்துரைக்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT