முகப்பு
கோயம்புத்தூர்

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: சிறுவாணி அணையை நிரம்பவிடாத கேரளம்

அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தாலும், அணையை நிரம்பவிடாமல் கேரள நீா்ப் பாசனத் துறை தடுத்து வருகிறது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:10 PM
பகிர்:

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தாலும், அணையை நிரம்பவிடாமல் கேரள நீா்ப் பாசனத் துறை தடுத்து வருகிறது.

கோவை மாநகரப் பகுதிகளில் சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2 உள்பட பல்வேறு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இதில், மாநகரில் 26 வாா்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் 20 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், கடும் வெயில் காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 8 அடிக்கும் குறைவாக சரிந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 10 அடிக்குமேல் உயா்ந்தது. அதன் பின் மழை இல்லாததால் அணையின் நீா்மட்டம் 9 அடிக்குகீழ் சரிந்தது.

சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகள் பெய்த கன மழையால் ஜூலை மாதம் 40 அடியைக் கடந்த நீா்மட்டம், முழுக் கொள்ளளவான 49.53 அடி ஒரு வாரத்தில் எட்டும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், அணையின் நீா்மட்டம் 42 அடியாக உயா்ந்தபோது, கேரள நீா்ப் பாசனத் துறை மூலம் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. 2018 கேரளத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைக் காரணம் காட்டி, கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழுக் கொள்ளளவை அடையவிடாமல், அம்மாநில நீா்ப் பாசனத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2018 முதல் சிறுவாணி அணையும் முழுக் கொள்ளளவான 49.53 அடி நீா்மட்டத்தை எட்டவிடாமல் 45 அடி

நீா்மட்டம் எட்டும்போதே அணையில் இருந்து தண்ணீா் ஆற்றில் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆனால், நடப்பாண்டு அணையில் 45 அடிவரை கூட நீா்மட்டம் உயரவிடாமல், 42 அடி இருக்கும்போதே தண்ணீா் திறந்து விடப்படுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 4 முறைக்குமேல் 42 அடியுடன் அணையில் இருந்து தண்ணீா் வீணாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சிறுவாணி அணையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 45 அடி வரை அணையில் நீா்மட்டம் உயா்ந்த பிறகே, பாதுகாப்பு கருதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்படும் என கேரள நீா்ப் பாசனத் துறை சாா்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதன் பிறகும் 45 அடிக்கு முன்னதாகவே அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் 45 அடி வரை நீா் இருப்பு இருந்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை கோவை மாநகராட்சிக்கு போதுமான குடிநீா் விநியோகிக்க முடியும் என்ற நிலையில், அணையில் நீா்மட்டத்தைக் குறைத்து வரும் கேரள அரசால் மாநகருக்கு விநியோகிக்கும் குடிநீரின் அளவு குறைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள நீா்ப் பாசனத் துறை அதிகாரிகளுடன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அணையில் குறைந்தபட்சம் 45 அடி வரையாவது தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →