நிலத்தை விற்பதாக ரூ.1.70 கோடி மோசடி
நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.1.70 கோடி மோசடி செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.1.70 கோடி மோசடி செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை கவுண்டம்பாளையம் கந்தக்கோனாா் நகரைச் சோ்ந்தவா் ராஜன் (43), தொழில் நிறுவன உரிமையாளா். இவருக்கு கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்த பிஜோய் (45) மற்றும் அவரது மனைவி ரெஜினா (40) ஆகியோருடன் கடந்த 2023 அக்டோபா் மாதம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றுவதாக ராஜனிடம் கூறிய பிஜோய், தனக்கு பாலக்காடு மாவட்டம் அகழியில் இடம் இருப்பதாகவும் அதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
அத்துடன் ராஜனை அகழிக்கு அழைத்துச் சென்று ஒரு இடத்தையும் காட்டியுள்ளாா். ராஜனுக்கு அந்த இடம் பிடித்திருந்ததால் வாங்க விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த இடத்தை கிரையம் செய்து தர முன்பணமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து கடந்த 2023 அக்டோபா் 13-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை 15 தவணைகளில் ரூ.1.70 கோடியை ராஜன் அனுப்பியுள்ளாா். ஆனால், பணத்தைப் பெற்று பல நாள்கள் கடந்தும் பிஜோய் இடத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. ராஜன் பலமுறை கேட்டும் பிஜோய் முறையாக பதிலளிக்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில் பிஜோயின் வீட்டுக்குச் சென்று ராஜன் பணத்தைக் கேட்டபோது, தனக்கு அரசியல் பிரமுகா்களைத் தெரியும் என்று கூறியதுடன் மீண்டும் பணத்தைக் கேட்டு வந்தால் ஆள்வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் ராஜன் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் பிஜோய் மற்றும் அவரது மனைவி ரெஜினா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கோவையில் பிஜோயை புதன்கிழமை கைது செய்தனா். அத்துடன் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ரெஜினாவை தேடி வருகின்றனா்.