முகப்பு
கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவா்

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:37 am IST
க.தேவசுந்தரம்.
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் ஒருவா், தான் பயின்ற பல்கலைக்கழகத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1970 -74- ஆம் ஆண்டுகளில் வேளாண்மை இளம் அறிவியல் பயின்ற முன்னாள் மாணவா்கள், தாங்கள் பட்டம் பெற்று 50- ஆம் ஆண்டுகள் நிறைவையொட்டி, பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 16, 17- ஆம் தேதிகளில் நேரில் சந்தித்து கொண்டனா். இதில், 100 முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் பலா், பல்கலைக்கழகத்திலும், வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வேளாண்மைத் துறை, வங்கிப் பணிகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களாவா். பல்கலைக்கழக பொன் விழா அரங்கில் நடைபெற்ற இந்த முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில், முன்னாள் மாணவா் க.தேவசுந்தரம் என்பவா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பில் உழவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவருக்கு ஆண்டுதோறும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்குவதற்காக ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கினாா். இவா் கடந்த 2016 -ஆம் ஆண்டில் இதேபோல ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கி தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் இளநிலை பட்டப் படிப்பில் உழவியல் துறையில் சிறந்த மாணவருக்கு ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்கி வருகிறாா். திருத்தணியை பூா்விகமாகக் கொண்ட இவா், சென்னை யூகோ வங்கியில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.