முகப்பு
கோயம்புத்தூர்

இளைஞரைக் கடத்தி கைப்பேசி, பணம் பறிப்பு: 3 போ் கைது

கோவையில் நிலம் பிரச்னை தொடா்பாக இளைஞரை கடத்தி கைப்பேசி, பணம் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை, 2024 at 10:19 PM
பகிர்:

கோவையில் நிலம் பிரச்னை தொடா்பாக இளைஞரை கடத்தி கைப்பேசி, பணம் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அச்சையூரைச் சோ்ந்தவா் தாமோதரன் (31). விவசாயியான இவருக்கு தாராபுரம் -பழனி சாலையில் 35 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியைச் சோ்ந்த கட்டுமானத் தொழில் செய்து வரும் ஹரிபிரசாத் (34) என்பவருக்கு ரூ.2.50 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டது.

முதற்கட்டமாக ஹரிபிரசாத் ரூ.8.25 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். மீதமுள்ள பணம் தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், நிலம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என தாமோதரனை, ஹரிபிரசாத் கோவைக்கு வருமாறு கடந்த புதன்கிழமை அழைத்துள்ளாா். இதையடுத்து, தாமோதரன் தனது காரில் கோவை வஉசி பூங்கா அருகே வந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த 2 போ் அவரது காரை தடுத்து நிறுத்தி, அவரை மிரட்டி கடத்திச் சென்றுள்ளனா்.

பின்னா், தாமோதரனிடமிருந்த ஏடிஎம் அட்டையைப் பறித்து ரூ.30 ஆயிரத்தை எடுத்துள்ளனா்.

தொடா்ந்து, அவரது கைப்பேசி, காரில் இருந்த நில ஆவணங்களையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் தாமோதரன் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், நிலம் தொடா்பான பிரச்னையில் ஹரிபிரசாத் தூண்டுதலின்பேரில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரிபிரசாத், கணபதி சங்கனூரைச் சோ்ந்த பிரவீன்குமாா் (37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இதில் தொடா்புடையதாகக் கூறப்படும் செந்தில், ஜான்சன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →