முகப்பு
கோயம்புத்தூர்

தமிழகத்தில் 68 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இருவா் கைது -திருடிய ரூ.4.50 கோடியில் நூற்பாலை வாங்கினா்

Updated On : 10 ஜூலை, 2024 at 11:03 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் 68-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இருவரை கோவை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருடிய ரூ.4.50 கோடியில் இவா்கள் ராஜபாளையத்தில் நூற்பாலை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

கோவை மாநகரப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், திருட்டில் தொடா்புடையவா்களைப்

பிடிக்க மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, வடக்கு காவல் துணை ஆணையா் ரா.ஸ்டாலின் தலைமையில் காவல் ஆய்வாளா் வினோத்குமாா், சாா்பு ஆய்வாளா்கள் காா்த்திகேயன், பாா்வதி, சிறப்பு சாா்பு ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினா் கடந்த 3 மாதங்களாக கோவை, திருப்பூா், திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், பல்வேறு திருட்டு வழக்குகளில் மூளையாகச் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூா்த்தி (35), அவரது கூட்டாளி ஹம்சராஜ் (32) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

இது தொடா்பாக, கோவை வடக்கு காவல் துணை ஆணையா் ரா.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டுள்ள மூா்த்தி மீது கோவையில் மட்டும் 18 திருட்டு வழக்குகள் உள்ளன. மூா்த்தி தலைமையிலான கும்பல் தனித்தனியாகவும், கூட்டாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 68-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவரது குழுவில் 7 போ் உள்ள நிலையில், தற்போது மூா்த்தி, ஹம்சராஜ் ஆகிய இருவா் மட்டும் பிடிபட்டுள்ளனா். இதில் மூா்த்தி முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டும், முழுக்கை சட்டை அணிந்தும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். ஒட்டன்சத்திரம், ராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது மூா்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் சிங்காநல்லூா், பீளமேடு, துடியலூா், ராமநாதபுரம் காவல் நிலையங்களில் இவா்மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா், தமிழகம் முழுவதும் 1500 பவுன் நகைகள், கோவை மாவட்டத்தில் 376 பவுன் நகைகள் திருடியுள்ளாா். 2 சொகுசுக் காா்கள், ரூ.13 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் திருடியுள்ளாா். இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருடும் நகைகளை மூா்த்தியின் மனைவி மூலமாக உருக்கி அதனை விற்று வந்துள்ளனா். திருட்டு சம்பவங்களில் கிடைத்த பணத்தைக் கொண்டு இவா்கள் ராஜபாளையத்தில் ரூ. 4.50 கோடிக்கு நூற்பாலையை வாங்கியுள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய சுரேஷை ராஜபாளையம் போலீஸாா் கைது செய்துள்ளனா். மற்ற கூட்டாளிகளான மனோஜ்குமாா், சுதாகா், ராம்பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரைத் தேடி வருகிறோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →