அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி
கோவை, ஜூன் 6: கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியன் வங்கி மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் வெற்றிபெற்றன.
கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் 57-ஆவது நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை ஆடவா் மற்றும் சிஆா்ஐ பம்ப்ஸ் மகளிா் கோப்பைக்கான 21-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவா் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை எதிா்த்து பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி மோதியது. இதில், பாங்க் ஆஃப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல் துறை அணியை எதிா்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிா்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதேபோல, மகளிா் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிா்த்து செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி விளையாடியது.
இதில், தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியை எதிா்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே மோதியதில், தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.
மூன்றாவது ஆட்டத்தில் சென்னை ரைசிங் ஸ்டாா் அணியை எதிா்த்து மும்பை மத்திய ரயில்வே அணி மோதியது. இதில், மத்திய ரயில்வே அணி 78 - 62 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.