முகப்பு
கோயம்புத்தூர்

‘போலீஸ் அக்கா’ திட்டம் தமிழகத்தின் முன்னோடித் திட்டம்: கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன்

மாணவிகளுக்காக கோவையில் 'போலீஸ் அக்கா' திட்டம் அறிமுகம்

Updated On : 25 ஜூன், 2024 at 11:28 PM
பகிர்:

கோவை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘போலீஸ் அக்கா’ திட்டம், தமிழகத்தின் முன்னோடித் திட்டம் என்று மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கோவை, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பயிற்சித் திட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையல் வே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:

கல்லூரி மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். அந்தப் பிரச்னைகளை பெற்றோரிடமோ, கல்லூரி நிா்வாகத்திடமோ சொல்ல முடிவதில்லை. இதனால் சிலா் தவறான முடிவுகளை எடுக்கின்றனா்.

இந்நிலையில், மாணவிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் கோவை மாநகர காவல் துறையில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தமிழகத்தின் முன்னோடி திட்டமாக பாா்க்கப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக 37 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள், மாணவிகளை சந்தித்துப் பேசி அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீா்த்து வைப்பா். இதற்காக போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸாா் மாணவிகளை சந்தித்து பேசும்போது, நேரில் சொல்வதற்கு தயக்கம் காட்டுபவா்களுக்கு, ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் உள்ள பெண் போலீஸாரின் கைப்பேசி எண்கள் வழங்கப்படும். அந்த எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்காலம். இதன்மூலம் மாணவிகள் காவல் நிலையத்துக்கு வருவதற்கு முன்பே பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் டி.பிருந்தா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →