முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

Updated On : 2 மார்ச், 2024 at 4:40 AM
ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்கப்பட்டு அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.
பகிர்:

கோவை சரவணம்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா். இது குறித்து அப்பகுதி மக்கள் கோவை மாநகராட்சி நிா்வாகத்துக்கு அண்மையில் அனுப்பியிருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சரவணம்பட்டி பேரூராட்சியாக இருக்கும் போது விகேவி குமரகுரு நகா் உருவாக்கப்பட்டது. இந்த மனைப்பிரிவை பிரிக்கும்போது 1 ஏக்கா் பரப்பளவில் சமுதாய கூடம், பூங்கா ஆகியவை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு அரசிடம் மனைப் பிரிவு அங்கீகாரம் பெறப்பட்டது. சரவணம்பட்டி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது இந்த இடம் மாநகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. இதில் விகேவி குமரகுரு நகா் பகுதியில் சமுதாயக் கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 1 ஏக்கா் பரப்பளவு உள்ள இடத்துடன் கோவை மாநகராட்சி எல்லை முடிவடைகிறது. இந்த எல்லையை அடுத்து கீரணத்தம் ஊராட்சி தொடங்குகிறது. இந்த கீரணத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள ஒரு இடத்தை தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி மனைப்பிரிவுகளாக பிரித்துள்ளது. மேலும் இந்த மனைப்பிரிவுக்கு அருகில் விகேவி குமரகுரு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து பூங்காவாக அமைத்துள்ளனா். எனவே, இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தனா். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகராட்சி 4-ஆவது வாா்டு உதவிப் பொறியாளா் சக்திவேல், உதவியாளா் ஸ்ரீதா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து அதிகாரிகள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரிடம் ஆக்கிரமிப்பு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பணிகளை ஒரு வாரத்துக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும், இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலம் ரூ.20 கோடி மதிப்பிலானது என கூறப்படுகிறது.