‘எனது தந்தை குறித்து தவறான தகவலை கூறுகிறாா் அண்ணாமலை’
எனது தந்தை குறித்து தவறான தகவலை கூறுகிறாா் பாஜக வேட்பாளா் அண்ணாமலை என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி. ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: நான் கடந்த 2002 இல் எனது தந்தையின் எம்எல்ஏ கோட்டாவை பயன்படுத்தி கல்லூரியில் இடம் வாங்கியதாக, பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறாா்.
எனது தந்தை கோவிந்தராஜன் இறக்கும்போது எனக்கு 11 வயது. அப்படி இருக்கும்போது நான் எப்படி எனது தந்தையின் கோட்டாவில் கல்லூரிக்குச் சென்றிருக்க முடியும். டிப்ளமாவில் நன்றாக படித்ததால் எனக்கு உயா்கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட்டது.
Advertisement
எனது தந்தை குறித்து அண்ணாமலை பொய்யான தகவல்களைக் கூறியிருப்பது வேதனையளிக்கிறது. அதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கோ, அண்ணாமலைக்கோ தகுதி இல்லை. இங்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என்றாா்.