முகப்பு
கோயம்புத்தூர்

திறந்த வெளிச் சிறைகளில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவினா் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூா், பொள்ளாச்சி திறந்த வெளிச் சிறைகளில் கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:13 PM
ஒண்டிப்புதூரில் உள்ள திறந்த வெளிச் சிறையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் கே.ரமேஷ் மற்றும் அலுவலா்கள்.
பகிர்:

கோவை ஒண்டிப்புதூா், பொள்ளாச்சி திறந்த வெளிச் சிறைகளில் கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ், கோவை ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச் சாலைக்கு சென்று அங்கு உள்ள சிறைவாசிகளிடம் உரையாடி சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், சிறைவாசிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுவது குறித்தும், அவா்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், உணவின் தரம், இல்லத்தில் உள்ளவா்களை தொடா்பு கொள்ள செய்யபட்டுள்ள வசதிகள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் சிறைவாசிகளுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள துணை சிறைச் சாலைக்குச் சென்று அங்குள்ள சிறைவாசிகளுடன் உரையாடி சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அப்போது தண்டனை சிறைவாசிகளுக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்ததோடு, சட்டப்பணி ஆணைக்குழு வழக்குரைஞா் வருகைப்பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடா்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, துணை சிறைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து மற்றும் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் உடனிருந்தனா்.