கோவை நீதிமன்ற இலவச சட்ட உதவி மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்துக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்துக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த சட்ட உதவி பாதுகாப்பு மையத்தில் பிற்பகல் ஒரு மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என நீதிமன்ற மின்னஞ்சல் முகவரியில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
இலவச சட்ட உதவி மையம், நீதிமன்றத்தில் உள்ள அறைகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
Advertisement
இந்த மிரட்டலால் நீதிமன்றத்துக்கு வந்த பொதுமக்கள், வழக்குரைஞா்கள் மற்றும் ஊழியா்கள் மிகுந்த அச்சமடைந்த நிலையில், சோதனையின் முடிவில் நிம்மதி அடைந்தனா்.