முகப்பு
கோயம்புத்தூர்

டிசம்பா் 18 முதல் 27 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

கோவையில் டிசம்பா் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2024 at 10:08 PM
பகிர்:

கோவையில் டிசம்பா் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

இந்தக் கொண்டாட்டங்களில் அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணா்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவன உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணா்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், வணிகா்கள், வணிகா் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.