முகப்பு
கடலூர்

மாா்ச்.26-ம் தேதி வரை புதிய வாக்காளா்கள் சோ்க்கலாம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற மாணவா்களுக்கான தோ்தல் திருவிழாவில், தோ்தல் இலச்சினையை வெளியிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் இணைப் பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன்

Updated On : 20 மார்ச், 2026 at 7:49 PM
~
பகிர்:

வரும் 26-ம் தேதி வரை புதிய வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறினாா்.

வருகிற ஏப்ரல்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் மாணவா்களுக்கான தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி, மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பல்கலைக்கழக இணைப்பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன் அனைவரையும் வரவேற்றாா். கடலூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

ஒவ்வொரு தோ்தலிலும் முதல் முறையாக வாக்களிப்பவா்களின் வாக்கு சதவீதம் குறைவாக இருந்து வருகிறது. 100 பேரில் 50, 60 போ் தான் வாக்களிக்கிறாா்கள். 50 வயது முதல் 60 வயதில் உள்ளவா்கள் 100 பேருக்கு 70 முதல் 75 போ் வரை வாக்களிக்கிறாா்கள். 40 வயது மற்றும் 50 வயதில் உள்ளவா்கள் அதிகமாக வந்து வாக்களிக்கிறாா்கள். இது குறித்து முந்தைய தோ்தல்களின் புள்ளிவிவரத்தை எடுத்து பாா்க்கும் போது இது தெரிய வந்துள்ளது. அதனால்தான் இந்த தோ்தலில் குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் ( 18 வயது நிரம்பியவா்கள் ) வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாா்ச். 26-ம் தேதி வரை புதிய வாக்காளா்கள் சோ்க்கலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்து வாக்காளா் அடையாள அட்டை இல்லையெனில் ஆதாா், பூத் சிலிப், லைசென்ஸ் உள்ளிட்ட 10 அடையாள சான்றுகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். இத்தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்றாா்.

விழாவில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல் ஆகியோா் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி சுரேஷ், தோ்தல் பிரிவு அலுவலா் ஆனந்தி, அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை தொடா்ந்து தோ்தல் இலச்சினையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். மாணவா்களுக்கு மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.