முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 339 இடங்களில் ரூ. 74 லட்சம் பறிமுதல்: ஆட்சியா் இரா.சுகுமாா்

தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை மூலம் இதுவரை 339 இடங்களில் பணம், மதுபானம் என என மொத்தம் ரூ.74,42,433 மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:42 AM
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:41 AM

தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை மூலம் இதுவரை 339 இடங்களில் பணம், மதுபானம் என என மொத்தம் ரூ.74,42,433 மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறிதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1,678 வாக்குச்சாவடிகள் மற்றும் 758 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவானது இணையத்தில் நேரலை செய்யப்படவுள்ளது. தொலைத்தொடா்பு வசதிகள் இல்லாத மூன்று வாக்குச்சாவடிகளில் முழு அளவில் சிசிடிவி கேமராவும், விடியோ பதிவும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதியோா்கள்: ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குகளை செலுத்த செல்லும் முன்பு, வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திட ஏதுவாக தன்னாா்வலா்களை கொண்டு வாக்குசாவடி மையங்களின் அருகில் கைப்பேசி வைப்பு அறை ஏற்படுத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் வாக்குச்சாவடி மையங்களை அணுகுவதை எளிதாக்கிட 758 வாக்குசாவடி அமைவிடங்களிலும், தேவைப்படும் நோ்வுகளில் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவதற்கு துணைபுரிய தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.

Advertisement

ஏற்கனவே, படிவம் 12ஈ மூலம் தபால் வாக்கு செலுத்த விருப்பம் அளித்த மாற்றுதிறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் வசிப்பிடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் சோ்த்து மாற்றுதிறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்கள் 6,027 போ் உள்ளனா். அவா்களுக்கு உதவுவதற்காக 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய தினங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

தடுப்புக் காவல்: தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 12 துறைகளில் பணிபுரியும் பணியாளா்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்கு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. தோ்தல் நாளன்று பணியாற்றும் காவல் துறையினா் மற்றும் இதர தோ்தல் பணி அலுவலா்கள் அந்ததந்த தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பு காவலில் உள்ள 36 போ் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 12ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை வாக்காளா் விவர சீட்டு, வாக்காளா் கையேடு ஆகியவை விநியோகம் செய்யப்படவுள்ளன.

இம்மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை 339 இடங்களில் சோதனை நடத்தியதில் பணம், மதுபானம் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.74,42,433 மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளன; 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்டணமில்லை தொலைபேசி எண் (18004258373) 21 புகாா்களும், சி விஜில் செயலி மூலம் 71 புகாா்களும், மற்றவற்றின் மூலம் 21 புகாா்களும் வந்தன. அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குசாவடிகளில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய 462 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்கள் மீது பிஎன்எஸ்எஸ் 126,128, 129 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ள 506 இனங்களில் 422 இனங்கள் காவல் நிலையங்களில் வைப்புகள் பெறப்பட்டுள்ளன. 79 இனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.