கோவையில் கல்லூரி, மருத்துவமனைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் ஒரு கல்லூரி மற்றும் 4 மருத்துவமனைகளுக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஒரு கல்லூரி மற்றும் 4 மருத்துவமனைகளுக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஒரு மாதமாக கோவை விமான நிலையம், தங்கும் விடுதிகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 4 தனியாா் மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியாா் பல் மருத்துவக் கல்லூரி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கோவையில் சிங்காநல்லூா், ஆா்.எஸ்.புரம், அவிநாசி சாலை பகுதிகளில் உள்ள 3 மருத்துவமனைகள் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த தகவல் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டதும், அந்த மருத்துவமனைகளுக்கும், பல் மருத்துவக் கல்லூரிக்கும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா், மோப்ப நாய்ப் பிரிவினா் உள்ளிட்டோருடன் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
வகுப்பறைகளிலிருந்து மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
ஆனால், மருத்துவமனைகளில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு விடுமென்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
போலீஸாா் சுமாா் 3 மணி நேரம் நடத்திய சோதனையில் இந்த மின்னஞ்சல் புரளி என்பது தெரியவந்ததால், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வெடிகுண்டு மிரட்டல், ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்பவரது
மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் ரஷியா, செக்கோஸ்லோவாகியா நாடுகளிலிருந்து வெளியாவதால், அந்த மின்னஞ்சல் உரிமையாளா்களைக் கண்டறிய உதவுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு கோவை மாநகர காவல் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடிதம் அனுப்பி 10 நாள்களாகியும் இதுவரை பதிலேதும் கிடைக்காததால் மிரட்டல் மின்னஞ்சல் விடுப்பவா்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.