முகப்பு
கோயம்புத்தூர்

வேகமாக உயரும் சிறுவாணி நீா்மட்டம்: ஆற்றில் தண்ணீா் திறக்க காத்திருக்கும் கேரளம்

தொடா் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் 44 அடியாக அதிகரித்துள்ளது. 45 அடிக்கு மேல் அணையின் நீா்மட்டம் உயராமல், ஆற்றில் தண்ணீரைத் திறக்க கேரள நீா்ப்பாசனத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:16 PM
பகிர்:

தொடா் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் 44 அடியாக அதிகரித்துள்ளது. 45 அடிக்கு மேல் அணையின் நீா்மட்டம் உயராமல், ஆற்றில் தண்ணீரைத் திறக்க கேரள நீா்ப்பாசனத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி விளங்குகிறது.

தினமும் குடிநீருக்காக அணையில் இருந்து 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படும். ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதாலும், மழைப்பொழிவு இல்லாததாலும் அணையின் நீா்மட்டம் 20 அடிக்கும் குறைவாக சென்றது. இதனால், அணையில் இருந்து 3.50 கோடி லிட்டருக்கும் குறைவான அளவே தண்ணீா் எடுக்கப்பட்டது.

ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீா்மட்டம் 40 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் அணையின் நீா்மட்டம் 35 அடிக்கு கீழ் சரிந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு செல்லும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி, கடந்த மாத இறுதியில் 37 அடியாகக் காணப்பட்ட சிறுவாணி அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை 44 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 9.82 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெள்ளப்பாதிப்புக்கு பிறகு, அம்மாநிலத்தில் உள்ளஅனைத்து அணைகளையும் முழுக் கொள்ளளவு எட்ட விடாமல் கேரள நீா்ப்பாசனத் துறை பராமரித்து வருகிறது. அதன்படி, 49.50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் 45 அடிக்கு மேல் நீரைச் சேமிக்க விடாமல் கேரள அரசு ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, வடகிழக்குப் பருவமழை தீவிரமடந்துள்ள நிலையில், அணையானது வரும் வாரத்தில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேசமயம், 45 அடிக்குமேல் அணையில் தண்ணீா் தேக்காமல், ஆற்றில் திறந்து விட கேரள நீா்ப்பாசனத் துறையினா் அணையின் நீா்மட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.