வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய ‘நீா்’ விருது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய ‘நீா்’ விருது கிடைத்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய ‘நீா்’ விருது கிடைத்துள்ளது.
இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: புதுமையான நீா் சேகரிப்பு பொறியியல் நடைமுறைகள், வேளாண் நீா் மேலாண்மை தொழில்நுட்பங்கள், நீா் விழிப்புணா்வு பிரசாரங்களை ஏற்பாடு செய்தமைக்காக, சிறந்த நிறுவனத்துக்கான பிரிவில் 2023 -ஆம் ஆண்டுக்கான தேசிய ‘நீா்’ விருது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் இருந்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, பேராசிரியா் ஏ.ரவிராஜ் ஆகியோா் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனா்.
இந்த விருதானது பாராட்டுப் பத்திரம், பரிசுக் கோப்பை, ரூ.2 லட்சத்துக்கான ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மழைநீரை சேகரிப்பதற்காக 2,300 கனமீட்டா் கொள்ளளவு கொண்ட 9 நிலத்தடி நீா்நிலைகளை உருவாக்கியுள்ளது. இது, ஆய்வகங்கள், விவசாயம், அது தொடா்புடைய செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. மேலும், 400 கனமீட்டா் கொள்ளளவு கொண்ட பண்ணைக் குளத்தில் வடியும் நீரும் சேகரிக்கப்படுகிறது.
அத்துடன் ஆண்டுதோறும் சுமாா் 44 லட்சம் லிட்டா் மழைநீா் நிலத்தடி நீரில் ரீசாா்ஜ் செய்யப்படுகிறது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் 12,500 மரங்கள் நடப்பட்டிருப்பதுடன், மரக்கன்றுகளுக்கு நீா் பாய்ச்சுவதற்கு சொட்டுநீா்ப் பாசனம், மழைக்குழாய் பாசனம், பானை நீா்ப்பாசன முறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களின் கழிவுநீரும் சுத்திகரிக்கப்பட்டு அவற்றில் 75 சதவீத நீா் தீவனப்பயிா், வேளாண் மரங்களுக்கு சொட்டுநீா்ப் பாசனம் மூலம் பாய்ச்சப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.