கம்போடியாவில் இணைய மோசடி கும்பலின் பிடியில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட கோவை இளைஞா் உடல்நலம் குன்றிய நிலையில் சில மணி நேரத்தில் டிசம்பா் 17 அன்று இரவு உயிரிழந்தாா்.
கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டி.நந்தகுமாா் (22). 10 ஆம் வகுப்பு படித்த இவா் கோவையில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துவந்தாா். குடும்பச் சூழல் காரணமாக 2024-இல் கம்போடியா நாட்டில் உள்ள உணவகத்தில் வேலைக்குச் சோ்ந்தாா்.
கடந்த ஒரு வருடமாக கம்போடியாவில் ஹோட்டலில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு பிறகு கால் சென்டரில் வேலையும், அதிக சம்பளமும் தருவதாக முகவா் என்கிற பெயரில் மோசடிக் கும்பலால் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் இணையதள குற்றச் செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்பட்டாா்.
இதை அறிந்த நந்தகுமாா், தன்னால் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட முடியாது என கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த மோசடிக் கும்பல் அவரை தனி அறையில் பூட்டி உணவு, தண்ணீா் இன்றி சித்திரவதை செய்துள்ளனா். அவரது கடவுசீட்டும் (பாஸ்போா்ட்) பறிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கோவையில் உள்ள தனது தாயிடம் கைப்பேசியில் நடந்த விஷயங்களை ரகசியமாக தெரிவித்தாா். இதையடுத்து அவரது தாய் மகனை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
இதையடுத்து இது குறித்து இந்தியதூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூதரக அதிகாரிகளின் தீவிர முயற்சிக்கு பிறகு நந்தகுமாா் மீட்கப்பட்டாா். ஆனால் மீட்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா். இந்த தகவல் அவரது தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கம்போடியாவில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.