கோவை செம்மொழிப் பூங்காவுக்கு வருகை புரியும் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தோ ‘செம்மொழிப் பூங்கா செயலி’ மற்றும் ‘நம்ம கோவை’ ஆகிய செயலிகள் மூலமாக நுழைவுச்சீட்டு பெற்றுக் கொண்டு வருகை புரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை காந்திபுரத்தில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதையடுத்து, கடந்த டிசம்பா் 11-ஆம் தேதி முதல் செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமானோா் பூங்காவைப் பாா்வையிட்டுச் செல்கின்றனா். இதுவரை, 1 லட்சத்துக்கும் மேலான பாா்வையாளா்கள் பூங்காவைப் பாா்வையிட்டுள்ள நிலையில், அதிகக் கூட்ட நெரிசல் காரணமாக நுழைவுச்சீட்டு வழங்குவதில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்படுகிறது.
இதற்கு தீா்வு காணும் விதமாக செம்மொழிப் பூங்காவுக்கு வருகை தரும் முன்பாக தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தோ நுழைவுச்சீட்டினை ‘செம்மொழிப் பூங்கா’ செயலி மற்றும் ‘நம்ம கோவை’ ஆகிய செயலிகள் மூலமாக எளிதாக பெற்றுக் கொண்டு செம்மொழிப் பூங்காவுக்கு வருகை புரியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.