சில நாள்களில் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, அங்கு நடைபெற்ற விழாவில் ரூ.31.75 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, சித்தாபுதூா் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைகள், குப்பைகள் சேகரிக்கும் மையம் உள்பட ரூ.162.50 கோடி மதிப்பில் 107 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். மேலும், 10 ஆயிரத்து 626 பயனாளிகளுக்கு ரூ.136.50 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:
கோவை மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்துள்ளோம். தற்போது, புத்தாண்டு பரிசாக சா்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்துள்ளோம். இனி சா்வதேச, தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் நடைபெறும். புதிய ஹாக்கி மைதானத்தைப் பயன்படுத்தி, சிறந்த ஹாக்கி வீரா்கள் உருவாகி கோவைக்கு பெருமை சோ்க்க வேண்டும்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் உயா்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த அதிமுக இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. திமுக அரசு அமைந்ததும் ரூ.52 கோடி மதிப்பில் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் மகளிா், மாணவா் உள்பட அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவா்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையில் சில நாள்களில் 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
உள்ளாட்சித் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவியை முதல்வா் கொண்டு வந்தாா். இந்தத் திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சிப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
விழாவில், வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கணபதி ப.ராஜ்குமாா் (கோவை), க.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஹாக்கி மைதானத்தில் உள்ள சிறப்பம்சங்கள்: 6,500 சதுர மீட்டா் பரப்பளவில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானத்தில் இரவிலும் போட்டிகள் நடத்த வசதியாக 6 மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்இடி விளக்குகள் உள்ளன. மைதானத்தைச் சுற்றிலும் கம்பி வேலிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீரா்கள், வீராங்கனைகளுக்கு உடை மாற்றும் அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஹாக்கி மைதானத்துக்கு தேவையான தண்ணீா் வழங்குவதற்காக தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திடலைப் பராமரிக்க ‘பாப்அப் ரெயின் சிஸ்டம்‘ எனப்படும் தானியங்கி நீா்ப்பாசன அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளில் 1,630 போ் அமரும் வகையில் கேலரி, விவிஐபி நுழைவாயில் மற்றும் பால்கனி, நிா்வாகக் கட்டடங்கள், வீரா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், 110 காா்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்தனா்.