முகப்பு
கோயம்புத்தூர்

சட்டப் பேரவைத் தோ்தல் ஜனநாயகப் போா்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சட்டப் பேரவைத் தோ்தல் ஜனநாயகப் போா் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:29 AM
கோவை மாவட்டம், கணியூா் சுங்கச்சாவடி அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மேற்கு மண்டல நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:26 PM

சட்டப் பேரவைத் தோ்தல் தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே நடைபெறும் ஜனநாயகப் போா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

கோவை மாவட்டம், கணியூா் சுங்கச்சாவடி அருகில் திமுக மேற்கு மண்டல நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி வரவேற்றாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன், எம்.பி. அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

திமுகவில் பணியாற்ற வருபவா்களுக்கு இளைஞரணி பயிற்சி மைதானமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முதல்வா், துணை முதல்வரும்கூட இளைஞரணியில் இருந்தே வந்துள்ளோம்.

ஆட்சி, அரசியல் என இரண்டிலுமே இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். அரசியலில் இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஜனநாயகப் போரை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்று மற்ற மாநிலத் தலைவா்கள் கருதுகின்றனா்.

ஆட்சியைப் பொறுத்தவரை மகளிா் விடியல் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம் என திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மகளிருக்கு மகிழ்ச்சி, எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி:

குறிப்பாக, இந்த மாதம் மகளிருக்கு மகிழ்ச்சி, எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி அளிக்கும் விதமாக மகளிா் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வழங்கி உள்ளோம். தோ்தலைக் காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றனா். தமிழக முதல்வா் அதை முறியடிக்கும் விதமாக முன்கூட்டியே பணத்தை மகளிருக்கு அளித்துள்ளாா். அத்துடன், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளாா்.

பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துவதால்தான் தமிழகம் 11.19 சதவீத வளா்ச்சியுடன், இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. அதைத் தடுக்க திட்டமிட்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

தோ்தல் வரும் காரணத்தால் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தமிழகத்துக்கு வருகிறாா்கள். தமிழகத்துக்கு அவா்கள் மட்டும்தான் வருவாா்கள். எந்தத் திட்டமும், எந்த நிதியும் வராது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

மக்கள் கூட்டத்தின் ஒருபகுதி...
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:28 AM

ஆனால், நிதிநிலை அறிக்கையை படித்து முடிக்கும் முன்பாகவே, அருமையான நிதிநிலை அறிக்கை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறுகிறாா். தனது சுயநலத்துக்காக அதிமுகவை பாஜகவுக்கு விற்றுவிட்டாா்.

இந்தத் தோ்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் நடைபெறும் ஜனநாயகப் போா். இதில் தமிழ்நாடு நிச்சயம் வென்று காட்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.மதிவேந்தன், என். கயல்விழி செல்வராஜ், இளைஞரணி துணைச் செயலாளா்கள் பிரகாஷ் எம்.பி, மாணவரணிச் செயலாளா் ராஜீவ் காந்தி, தீா்மானக் குழு செயலாளா் நா.காா்த்திக், கோவை மாவட்டச் செயலாளா்கள் தளபதி முருகேசன், துரை.செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூா் ரவி, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.