முகப்பு
கோயம்புத்தூர்

177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:37 PM
செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறும் மக்கள் தொடா்பு முகாம் பேரூா் வட்டம், செல்வபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி, மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏற்கெனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 மதிப்பில் நலத் திட்ட உதவிகள், தாட்கோ சாா்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.7.50 லட்சம் கடனுதவிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 177 பயனாளிகளுக்கு ரூ.85.19 லட்சம் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து, அவா் பேசுகையில்,‘ மாநகராட்சி சாா்பில், குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட இணைப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மக்களுக்கு விரைவாக வழங்குவதற்காக மாநகராட்சி திட்டத்தின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் தொடா்பு முகாம்களில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் உள்பட அனைத்து மனுக்களுமே முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் நிலை குறித்து கேட்டறியப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமாா் ஜெயின், துணை ஆட்சியா் (பயிற்சி) மது அபிநயா, மண்டலக் குழுத் தலைவா் தெய்வானைதமிழ்மறை, வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பேரூா் வட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.