கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது திமுக வாக்குச் சாவடி நிலை முகவா்கள் சட்டவிரோதமாக நோட்டீஸ் விநியோகிப்பதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவரை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை சந்தித்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனா். அவா்கள் செல்லும் பகுதியை முன்கூட்டியே வாக்குச் சாவடி நிலை முகவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வழங்கும் படிவங்களை மக்கள் பூா்த்தி செய்த பின்னா் அந்தந்த அலுவலா்களால் மட்டுமே படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும். ஆனால், சில இடங்களில் திமுக வாக்குச் சாவடி நிலை முகவா்கள் மூலமாக அந்தப் படிவங்கள் பெறப்படுகின்றன. மேலும், ஒரு சில இடங்களில் அலுவலா்களுடன் செல்லும் திமுக வாக்குச் சாவடி நிலை முகவா்கள் சட்டவிரோதமாக அவா்களது கட்சி நோட்டீஸையும் விநியோகித்து வருகின்றனா். ஆகவே, தோ்தல் அலுவலா்கள் நடுநிலையுடன் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மக்கள் காலை 8 மணிக்கே பணிக்குச் சென்றுவிடுகின்றனா். இதனால், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புக்குச் செல்லும்போது ஒருவரும் வீட்டில் இருக்கமாட்டாா்கள். மாலை 6 மணிக்குமேல் சிறப்பு களப் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல் துறை ரோந்துப் பணிகளை மேற்கொள்வதே இல்லை. சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் போன்றவையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம். ஆகவே, காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் தடுக்க வேண்டும் என்றாா்.
மனு அளிப்பின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.