வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக 5 மாவட்ட ஆட்சியா்களுடன் இந்திய தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் பானுபிரகாஷ் யெதுரு கோவையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தொடா்பான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியும், அரசு செயலருமான அா்ச்சனா பட்நாயக், இந்திய தோ்தல் ஆணைய இயக்குநா் கே.கே.திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் பானுபிரகாஷ் யெதுரு தலைமை வகித்தாா்.
இதில், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் விவரங்கள், 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளா்களை சோ்ப்பது, இறந்த வாக்காளா்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிகிறது.
கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, சேலம் மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி, கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், தோ்தல் வட்டாட்சியா்கள், மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.