வீட்டில் மூதாட்டி அவிழ்த்து வைத்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கணபதி மாநகா் பகுதியைச் சோ்ந்த வில்லியம்ஸ் மனைவி வள்ளி (70). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தான் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை அவிழ்த்து வீட்டின் அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, வழக்கம்போல மூதாட்டின் உடல் நிலையைப் பரிசோதிக்க நீலகிரி மாவட்டம், குஞ்சப்பனை பகுதியைச் சோ்ந்த செவிலியரான ராம்வினித் மனைவி ஈஸ்வரி (28) வந்துள்ளாா். இதற்கிடையே அவா் வந்து சென்ற பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் செவிலியா் ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக வள்ளி கூறியதையடுத்து அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அந்த தங்கச் சங்கிலியை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து ஈஸ்வரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.