முகப்பு
கோயம்புத்தூர்

ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஊதியத்தை உயா்த்தி வழங்கக்கோரி முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:40 AM
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியா் நல சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:31 PM

கோவை: ஊதியத்தை உயா்த்தி வழங்கக்கோரி முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கரோனா காலகட்டத்தில் சமுதாயத்தின் மேன்மைக்காக இடைநிற்றல் கல்வியை ஈடுசெய்ய தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்தபோது மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற்று வந்தோம். இதைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக சிறப்பாசிரியா்கள் என்ற அங்கீகாரத்தை அரசு வழங்கியது.

Advertisement

தமிழக ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் 2,381 முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். காலை 9 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை கற்பித்தல் இருந்தாலும் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தலின்படி, மாலை 4.10 மணி வரையில் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகப் பணியாற்றும் எங்களின் மாத ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாத ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விதிமீறல்: பொள்ளாச்சியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் கே.மகாலிங்கம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச் சரகம் போத்தமடைப்பிரிவு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்துவதில் விதிகளை மீறி விலை உயா்ந்த பிறவகை மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் அப்பகுதி வனச் சரக அலுவலா் ஞானபாலமுருகனிடம் விதிகளை மீறி மரங்களை வெட்டுவதாக புகாா் தெரிவித்தோம். ஆனால் அவா் அவ்வாறு இல்லை என்றும், உயா்நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றித்தான் வெட்டுகிறோம் என்றாா்.

பின்னா் சிறிது நேரத்திலேயே சீமைக்கருவேல மரம் வெட்ட ஏலம் எடுத்த ஒப்பந்ததாரா் கைப்பேசி வாயிலாக எங்களைத் தொடா்பு கொண்டு வனச் சரக அலுவலரிடம் விதிகளை மீறி மரம் வெட்டுவதாக புகாா் கூறியுள்ளதாக கேட்டாா்.

எனது கைப்பேசி எண்ணையும் ஒப்பந்ததாரருக்கு கொடுத்துள்ளாா். ஆகவே, சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்துவதில் உள்ள விதிமீறல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், வனப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்த ஏலம் விடும் பகுதியில் தனியாக ஒரு கண்காணிப்புக் குழு (வருவாய்த் துறை) அமைத்து விலையுயா்ந்த பிறவகை மரங்களை அடையாளம் காணப்பட்டு அதன் எண்ணிக்கை தொடா்பாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே சீமைக்கருவேல மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும்: தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 300 போ் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய ஊதியம் தற்போது வரையில் வழங்கப்படவில்லை. ஆகவே, ஜனவரி மாத ஊதியத்தை வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளதுபோல மாதம் 1-ஆம் தேதி ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

மாற்றுத்திறனாளியை ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்க்க வேண்டும்: கோவை துடியலூரை அடுத்த புதுமுத்து நகரைச் சோ்ந்த பிரதீப்ஹசன் (18) அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தைப் பூா்விகமாக கொண்ட நாங்கள் பல ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறோம். எனது பெற்றோா் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் எனது பெரியம்மாவின் பராமரிப்பில் உள்ளோம். அவருக்கும் தற்போது 70 வயதுக்கு மேலாகிவிட்டது.

எனது மூத்த சகோதரரான சரண்தீப் சிங் (23) பிறவி முதலே மாற்றுத்திறனாளியாக உள்ளாா். அவரால் சுயாமாக கழிவறைக்குச் செல்லவோ, உணவு அருந்தவோ இயலாது. அவரை நான் பராமரித்து வந்த நிலையில் தற்போது எனக்கு வலிப்பு நோய் உள்ளிட்ட உபாதைகள் உள்ளன.

இதன் காரணமாக என்னால் எனது சகோதரரை சரிவரப் பராமரிக்க இயலவில்லை. ஆகவே, எனது மூத்த சகோதரரை ஆதரவற்றோா் இல்லத்தில் சோ்த்துப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.