முகப்பு
திருப்பூர்

விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50% குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு

விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:36 PM
திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல்.
பகிர்:

விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் தலைமையில் பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின் கரைப்புதூா் சக்திவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கியத் தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது, வளைகுடா போா் உள்ளிட்ட காரணங்களால் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், பஞ்சு விலை உயா்வால் நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை கடந்த வாரம் விலையேற்றப்பட்டது. ஆனால், ஜவுளி உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், ரூ.200 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் விற்பனையாகாமல் கிடங்கில் தேக்கம் அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், அங்குள்ள ஜவுளி உற்பத்தியாளா்களால் விலையைக் குறைவாக தர முடிகிறது.

Advertisement

தமிழகத்தில் நிலவும் மின் கட்டணத்தால் அவா்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு தனி மின் கட்டண டேரிப் அமைப்பை ஏற்படுத்தி மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். மேலும், உள்ளூா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் நூல் மற்றும் கழிவுப் பஞ்சு என்னும் கேம்பா் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரி உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்த பின்னரே நூலை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். உள்ளூரில் கேம்பா் பஞ்சு, நூல் விலை சீராக இருந்தால்தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்த பலன்களை இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் பெற முடியும். தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கும் வகையில் ஒரு சிப்ட் மட்டும் இயங்கும். மேலும், ஐவுளி உற்பத்தி ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 50 சதவீதம் குறைக்கப்படும். இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தொழில் நிலை குறித்து ஆலோசனை நடத்தி தேவைப்படும்பட்சத்தில் முழுமையாக ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments