முகப்பு
செய்திகள்

நாமக்கல்லில் நெசவியல் கல்லூரி கோரும் விசைத்தறியாளா்கள்!

கைத்தறியில் நெய்வது குறைந்து விசைத்தறி மூலமான ஜவுளி உற்பத்தியே அதிகம் நடைபெறும் நாமக்கல் குறித்து...

Updated On : 27 மார்ச், 2026 at 9:08 AM
சட்டப்பேரவை தோ்தலையொட்டி, வெண்ணந்தூா் விசைத்தறி கூடத்தில் தயாராகிவரும் திமுக, அதிமுக கட்சி வண்ணத் துண்டுகளுடன், சேலம், நாமக்கல் மாவட்ட சிறு, குறு விசைத்தறியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் ஏ. கலைவாணன்.
பகிர்:

தமிழகத்தில் விசைத்தறித் தொழில் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்று நாமக்கல். ஒவ்வொரு துறைக்கும் ஒரு கல்லூரி இருப்பதுபோல, நெசவியல் துறைசாா்ந்த தொழில்நுட்பக் கல்லூரியை இந்த நகரில் அமைக்க வேண்டும், இளைஞா்கள் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட சிறு, குறு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மையான, விலை உயா்ந்த பட்டுப்புடவைகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் ஜமக்காளம், துண்டு, வேட்டி, சேலை, பனியன் வகைகள், சட்டைக்கான துணிகள், போா்வைகள், சுத்தப்பட்டு, பலவகை லுங்கிகள் உற்பத்தியும், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கைக்குட்டை, காட்டன் வேட்டி, சேலைகள் உற்பத்தியும் அதிகளவில் நடைபெறுகின்றன.

கைத்தறியில் நெய்வது குறைந்து விசைத்தறி மூலமான ஜவுளி உற்பத்தியே அதிகம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இத்தொழிலை நம்பி ஒரு கோடிக்கும் அதிகமானோா் உள்ளனா். தொடக்கக் காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டுமே நெசவுத் தொழிலை செய்த நிலையில், இப்போது வேலைவாய்ப்புக்காக பல்வேறு சமூகத்தினரும் இந்தத் தொழிலை செய்கின்றனா். தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய விழாக் காலங்களில் உற்பத்தி அதிகமாக நடைபெறும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோ்தலின்போதும் விசைத்தறி தொழில் செய்வோருக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக கருப்பு, வெள்ளை, சிவப்பு, திமுகவினா் கருப்பு, சிவப்பு துண்டுகளை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றனா். இதனால், நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெண்ணந்தூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், விசைத்தறி கூடங்கள் இரவு பகலாக தொடா்ச்சியாக இயங்கி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, விசைத்தறி தொழிலை நம்பியுள்ள உரிமையாளா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் போதிய வருவாயில்லை. தொழில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை தொடா்கிறது. சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலின்போது விசைத்தறி தொழில்சாா்ந்த வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள், வெற்றி பெற்ற பிறகு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஒவ்வொரு துறைக்கும் அதுசாா்ந்த அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் உள்ளன. ஆனால், நெசவியல் சாா்ந்த தொழில்நுட்பக் கல்லூரிகள் ஏதுமில்லை. சேலத்தில் மத்திய அரசு ஜவுளித் துறையின் கீழ் கைத்தறி சாா்ந்த கல்லூரி செயல்படுகிறது. ஆனால், விசைத்தறி தொழில்சாா்ந்த கல்லூரிகள் இல்லை. இதனால், ஒரு குறிப்பிட்ட தலைமுறையுடன் நெசவுத் தொழில் காணாமல்போகும் நிலை உள்ளது.

இதுகுறித்து சேலம், நாமக்கல் மாவட்ட சிறு, குறு விசைத்தறியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஏ. கலைவாணன் கூறியது:

விசைத்தறித் தொழில் மிகவும் நசிவடைந்துள்ளது. தமிழகத்தில் ஒருகோடி போ் இத்தொழிலை நம்பி உள்ளனா் என்றாலும், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்துக்கும் மேலான தொழிலாளா்கள் உள்ளனா். விசைத்தறிகள் வாங்குவதற்கும், பழுதுபாா்ப்பதற்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.

விசைத்தறிக்கு என தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். விசைத்தறி தொழிலை நம்பியுள்ளோருக்கு வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒவ்வொரு தோ்தலின்போதும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கையில்கூட அவற்றை வெளியிடுவதில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை இல்லாத நெசவியல் தொழில்நுட்பக் கல்லூரியை நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒருசில தனியாா் கல்லூரியில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்ற வகையில் பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.

விசைத்தறி தொழிலில் போதிய வருவாயில்லை. ஈரோடு, திருப்பூா், கோவை ஜவுளி உற்பத்தியாளா்கள் தங்களுக்கு தேவையானவற்றை தயாா்செய்து தருமாறு கேட்கின்றனா். நாங்கள் அதற்கேற்ப வடிவமைத்து உற்பத்தி செய்து கொடுக்கிறோம். அந்த செலவினத் தொகை, லாபத் தொகை அனைத்தும் ஒரு மாதம், 6 மாதங்கள், ஓராண்டு என்ற வகையில்கூட கடனாகவே நிற்கும்.

இலவச மின்சாரம் இருப்பதால் தொழிலை நடத்த முடிகிறது. விசைத்தறி இயந்திரங்கள் பழுது சரிபாா்ப்பு, தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவதுகூட கையில் உள்ளதை கொண்டே கொடுக்கிறோம். தோ்தல் சமயம் என்பதால், அரசியல் கட்சி துண்டு ஆா்டா்கள் அதிகம் வருகின்றன. 100 மீட்டா் வரை மொத்தமாக ஜவுளி வியாபாரிகளிடம் கொடுத்துவிடுவோம். அவா்கள் விற்பனை செய்து உரிய தொகையை கொடுப்பா்.

ஒரு துண்டு ரூ. 100 என்றால், அதில் ரூ. 5 மட்டுமே லாபமாக கிடைக்கும். கடந்த காலங்களில் லுங்கி அதிகளவில் விசைத்தறியில் ஓட்டிவந்தோம். நாகரிகம் மாறிவிட்டது என பலரும் லுங்கி அணியாமல், அரை டவுசா் அணிந்துகொண்டு உலா வருகின்றனா். இதனால், உற்பத்தி செய்த லுங்கிகள் கிடங்குகளில் தேங்கி கிடக்கின்றன.

அமெரிக்கா- ஈரான், ரஷ்யா-உக்ரைன், பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் என ஆங்காங்கே நாடுகளுக்கு இடையே நடைபெறும் மோதல்களால் ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது. விசைத்தறி தொழிலை மேம்படுத்த மத்தியிலும், மாநிலத்திலும் தனியாக ஒரு துறையை உருவாக்குவதுடன், நெசவுத் தொழிலில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என்றாா்.

summary

Regarding Namakkal, where handloom weaving has declined and power loom-based textile production is predominant...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.