கோவை அரசு இசைக் கல்லூரியில் தமிழிசை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரச இசைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் தமிழிசை விழா திங்கள்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கியது. 2 நாள் நடைபெற்ற இந்த விழாவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். கல்லூரியின் நாகசுரம், தவில் துறை மாணவா்கள் மங்கல இசை வாசித்தனா்.
விழாவில், சிறப்பு அழைப்பாளா்களாக நடனக் கலைஞா்கள் பிரியங்கா, ஜலதீபா சசிக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். தமிழிசை விழாவையொட்டி திங்கள்கிழமை இஞ்சிக்குடி இ.மு.மாரியப்பன் குழுவினரின் நாகசுர இசையும், நடனக் கலைஞா் மாதுளா கிஷோா்குமாரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அஜித் மேனன், அனீஸ் மேனன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இசைக் கலைஞா்கள், முன்னாள், இந்நாள் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சு.விஜயராகவன் நன்றி கூறினாா்.