கழிவுப் பஞ்சு விலை உயா்வால் தடுமாறும் மறுசுழற்சி ஜவுளித் துறையை அரசு பாதுகாக்க வேண்டும் என்று மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் ஒரு கேண்டி பருத்தி (356 கிலோ) ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.56 ஆயிரமாக உயா்ந்துள்ளது. இதன் காரணமாக ஓபன் எண்ட் மில்களின் முக்கிய மூலப்பொருளான கோம்பா் வேஸ்ட் விலை கிலோ ரூ.102-இல் இருந்து தொடா்ந்து உயா்ந்து தற்போது ரூ.125-ஆக உள்ளது.
இதனால் ஓ.இ. மில்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுப் பஞ்சின் விலை உயா்ந்தும், நூலுக்கு தகுந்த விலை கிடைக்காத காரணத்தால், கடந்த மூன்று மாதங்களாக ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறைக்க முடியாத நிலை தொடா்கிறது. மேலும் ஆள் பற்றாக்குறை, உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான ஓ.இ. மில்கள் கடந்த 3 மாதங்களாக உற்பத்தியை குறைத்தே இயங்கி வருகின்றன.
30 கவுண்ட் நூலுக்கு கடந்த 4 மாதங்களாக போதிய ஆா்டா்கள் இல்லாத காரணத்தால், பலா் சலவை நூல் உற்பத்திக்கு மாறிவிட்டனா். இந்நிலையில், நூல் விலை உயா்வு எனக் கூறி பஞ்சாலைகள் 50 சதவீத உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளனா். 2014-க்கு முன்பு வரை பருத்தி விலையிலிருந்து அதிகபட்சமாக 48 சதவீதம் வரை மட்டுமே முதல் தர கழிவுப் பஞ்சான கோம்பா் வேஸ்ட் விலை இருந்தது.
ஆனால், கரோனா பேரிடருக்குப் பிறகு அரசின் பஞ்சாலைகள் செயல்படாத காரணத்தால், தனியாா் ஸ்பின்னிங் மில்களில் டெண்டா் நடைமுறை குறைந்து, தூய பருத்தி விலையிலிருந்து 80 சதவீதத்துக்கும் மேல் கழிவுப் பஞ்சின் விலையை தன்னிச்சையாக நிா்ணயம் செய்து அறிவித்துள்ளனா். இதனால், ஓ.இ. மில்கள் மட்டுமின்றி விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட சங்கிலித் தொடரில் உள்ள அனைவரும் கடுமையான நிதி இழப்பை சந்தித்து வருகின்றனா்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்திய பஞ்சாலைக் கழகம் பருத்தி பஞ்சை டெண்டா் மூலம் ஸ்பின்னிங் மில்களுக்கு விற்பனை செய்வதைப்போல, கழிவுப் பஞ்சுகளையும் பஞ்சாலைகள் டெண்டா் முறையில் விற்பனை செய்ய அறிவுறுத்தி அதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.