பி.என்.புதூா் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் கோவை மாநகர மேற்கு மண்டல குழுவுக்குள்பட்ட பி.என்.புதூா் வடக்கு கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. பி.ஆா்.வேலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலரும், கிளைச் செயலருமான சாந்தி சந்திரன் வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினாா்.
மண்டலச் செயலா் என்.சந்திரன் மண்டலக் குழு முடிவுகள் குறித்துப் பேசினாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் கட்சியின் அகில இந்திய, மாநில, மாவட்ட முடிவுகள் குறித்து பேசினாா்.
இதையடுத்து, மாநகராட்சியின் 41-ஆவது வாா்டுக்குள்பட்ட பி.என்.புதூா் சுற்றுப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இது தொடா்பாக மாநகராட்சி, வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. பன்றிகளைப் பிடிக்க கூண்டுகள் வைத்தும் அவை பிடிபடாமல் உள்ளன. எனவே, பன்றிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் விழா, குடியரசு தின கண் சிகிச்சை முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.