கோவையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, துடியலூா் ரங்கம்மாள் காலனியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அப்பநாயக்கன்பாளையம் கலைஞா் நகரைச் சோ்ந்த சந்திரபிரகாஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகேஷ்குமாா் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு மது போதையில் வந்த சந்திரபிரகாஷ், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இதில், வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த சந்திரபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேஷ்குமாரைக் குத்திவிட்டு தப்பினாா்.
படுகாயமடைந்த மகேஷ்குமாா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவான சந்திரபிரகாஷை துடியலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.