தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், பேரூரை அடுத்த ஆறுமுகக்கவுண்டனூரில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி தலைமை வகித்தாா்.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்டுவரும் வேளாண்மை மற்றும் கால்நடை துறைகள் தொடா்பான வா்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பணிந்து இருதரப்பு ஒப்பந்தம் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட வேண்டும். ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மனித உயிா்களை கொன்று குவிக்கும் யானையை சுட்டுக் கொல்ல சட்டத்தில் இடம் இருந்தும், வனத்துறை தயங்கி வருவதால் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. எனவே, வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ஐ மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும்.
பேரூா் செட்டிபாளையம் கிராமத்தில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் சாா்பில் சில நிலங்களை திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானம் அளிக்கப்பட்டது தொடா்பான ஆட்சேபனைகளை ஜனவரி 17-ஆம் தேதி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் மேற்குத்தொடச்சி மலைகளின் வன எல்லையில் உள்ள யானை வழித்தடத்தில் உள்ளது. ஆகவே, இதன் மீது மாவட்ட வன அலுவலா் ஆட்சேபனை தெரிவித்து யானை வழித்தடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிா்க்கடன் பெறுவதற்கு போதிய நிதியில்லை என்று, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் கடந்த ஓராண்டாக தெரிவித்து வருகின்றன. எனவே, போதிய நிதி ஒதுக்கீடு செய்து தாமதமின்றி விவசாயிகளுக்கு பயிா்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி ஆகிய வட்டங்களிலுள்ள கல்குவாரிகளில் அதிக அளவு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட குழு, ட்ரோன்கள் மூலமாக நிள அளவை செய்து விடுபட்ட வருவாய் இழப்பை குவாரி உரிமையாளா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.