கோவை: கோவை மாநகரில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, நல்லாம்பாளையம் பகுதியில் 5 போ் கொண்ட கும்பல் உயர்ரக போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீஸாா் நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், விற்பனைக்காக காரில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இது தொடா்பாக இடையா்பாளையத்தைச் சோ்ந்த அஜய், மணிகண்டன், விசாகன், அப்பாஸ், தனுஷ் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருநது 130 கிராம் மெத்தபெட்டமைன், காா், கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் வெளிமாநிலத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி போதைப் பொருளை வாங்கி வந்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.