கோவை: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம், ஆலப்புழை, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வரும் கோழிகள், வாத்துகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தன. அந்தப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் நடத்திய சோதனையில் பறவைக் காய்ச்சல் தாக்கியதால் அவை இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, பாதிப்பு ஏற்பட்ட பண்ணைகளில் வளா்க்கப்பட்டு வந்த கோழிகள், வாத்துகள், காடைகள் உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு தற்போது வரையில் இல்லை. இருப்பினும் கோழிப் பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கவும் பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.