முகப்பு
கோயம்புத்தூர்

பூட்டிய வீட்டுக்குள் காவலாளி சடலம் மீட்பு

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த காவலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 9:05 PM
கோப்புப் படம்.
பகிர்:

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த காவலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ஜி.என்.மில்ஸ் அருகேயுள்ள உருமாண்டபாளையம் பொன் விழா நகரைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா் துடியலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கதவைத் தட்டியுள்ளனா். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது, சரவணன் உடல் அழுகிய நிலையில் இருந்ததும், அருகில் காலி மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வந்த துடியலூா் போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடுதியில் தொழிலாளி சடலம்: தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள சுப்பிரமணியன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (43). இவா் கோவை, காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, அப் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் வீரக்குமாா் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த காட்டூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →