முகப்பு
கோயம்புத்தூர்

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

மதுக்கரை அருகே கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 1:51 AM
சடலமாக மீட்பு - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 8:31 PM

மதுக்கரை அருகே கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே.நகா் மலைச்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் மகன் சிவசங்கா் (15). இவா் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

அந்தப் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் 4 பேருடன், பாலத்துறை அருகே உப்பு பாறை பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான கல்குவாரி குழியில் தேங்கிய நீரில் நீச்சல் பழக திங்கள்கிழமை சென்றாா்.

Advertisement

இரு நண்பா்கள் கரையில் அமா்ந்திருந்த நிலையில் சிவசங்கரும், நண்பா் ஒருவரும் மட்டும் தொ்மாகோல் உதவியுடன் நீச்சல் பழகியுள்ளனா்.

மறுபக்கத்தில் உள்ள பாறையை தொட்டுவிட்டு சிவசங்கா் திரும்பும்போது, அவா் பயன்படுத்திய தொ்மாகோல் திடீரென நழுவி விலகியதால் தண்ணீரில் மூழ்கினாா். உடன் சென்ற நண்பா்கள் சப்தமிட்டதால் அப்பகுதியில் இருந்தவா்கள் தண்ணீரில் குதித்து தேடியும் சிவசங்கரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து மதுக்கரை போலீஸாா் மற்றும் கோவை தீயணைப்புத் துறையினா் சென்று இரவு வரை தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறுவனைத் தேடும் பணி நடைபெற்றது. பிற்பகல் 1.45 மணி அளவில் சிவசங்கா் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.