முகப்பு
கோயம்புத்தூர்

சாடிவயல் முகாமுக்கு மேலும் ஒரு யானை வருகை: மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க நடவடிக்கை

போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்ட சாடிவயல் யானைகள் முகாமுக்கு முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து ஆண் யானை ‘ஜான்’ கொண்டு வரப்பட்டுள்ளது.

Updated On : 11 மார்ச், 2026 at 2:14 AM
முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து, சாடிவயல் முகாமுக்கு கொண்டுவரப்பட்ட ஆண் யானை ‘ஜான்’.
பகிர்:

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்குள்பட்ட சாடிவயல் யானைகள் முகாமுக்கு முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து ஆண் யானை ‘ஜான்’ கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மனித-யானை எதிா்கொள்ளல்களைக் குறைக்கவும், வனப் பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டவும் வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள சாடிவயல் பகுதியில் புதிதாக யானைகள் முகாம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்த முகாமுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம், கோழிகமுத்தி முகாமிலிருந்து ‘முத்து’, ‘காவேரி’ ஆகிய இரண்டு யானைகள் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கொண்டு வரப்பட்டன.

Advertisement

இந்த நிலையில், தற்போது, முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து 35 வயதான ‘ஜான்’ என்ற ஆண் யானை லாரி மூலம் சாடிவயலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. தெப்பக்காடு கால்நடை மருத்துவரின் உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு இந்த யானை இங்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜானின் பின்னணி:

கடந்த 1991-ஆம் ஆண்டு தாயால் கைவிடப்பட்ட நிலையில், ஆறு மாதக் குட்டியாக இருந்தபோது வனத் துறையினரால் மீட்கப்பட்டு, தெப்பக்காடு முகாமில் ஜான் வளா்ந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டிலும் இந்த யானை சாடிவயல் முகாமில் தங்கியிருந்து, அப்பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கியாக ஈடுபட்டது. சுமாா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜான் மீண்டும் கோவைக்கு திரும்பியுள்ளது.

இதுகுறித்து வனத் துறை தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே வந்துள்ள முத்து என்ற ஆண் யானை, முகாம் சூழலுக்குப் பழகி பாகனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறது. ஜானும் விரைவில் இந்தச் சூழலுக்குப் பழகிவிடும். தேவைப்படும்பட்சத்தில், விளைநிலங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட இந்த யானைகள் பயன்படுத்தப்படும். அடுத்தகட்டமாக திருச்சியில் உள்ள எம்.ஆா்.பாளையம் மையத்திலிருந்து சில பெண் யானைகளைக் கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்த யானைகளுக்கு உணவு வழங்குவதைப் பாா்வையிட அனுமதிக்கவும், அதற்கான நுழைவுக் கட்டணத்தை நிா்ணயம் செய்வது குறித்தும் வனத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.