முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கரை - மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலை திறப்பு

கோவை மதுக்கரை - மாதம்பட்டி வரையிலான மேற்கு புறவழிச்சாலை, உக்கடம் பேருந்து நிலையம், இரண்டு இடங்களில் முதல்வா் படைப்பகம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 1:43 AM
உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். ~காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த மதுக்க
பகிர்:

கோவை மதுக்கரை - மாதம்பட்டி வரையிலான மேற்கு புறவழிச்சாலை, உக்கடம் பேருந்து நிலையம், இரண்டு இடங்களில் முதல்வா் படைப்பகம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டா் தொலைவுக்கு 3 கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி, கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை ரூ.250 கோடி மதிப்பில் 11.08 கிலோ மீட்டா் தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், காணொலிக் காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு புறவழிச்சாலையில் முதல் கட்ட சாலைப் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் இருந்து பேரூா், சிறுவாணி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையைப் பயன்படுத்தி எளிதாகச் செல்ல முடியும். இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கப்படும். மேற்கு புறவழிச்சாலைப் பணி முழுமையாக முடிவடைந்தால் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றாா்.

உக்கடம் பேருந்து நிலையம்:

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட உக்கடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையத்தையும் காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். உக்கடம் பேருந்து நிலையத்தில் 58 பேருந்துகள் நிறுத்தும் தளங்கள், 80 பேருந்துகள் இயங்கும் வகையில் வளாகம், நன்கு வடிவமைக்கப்பட்ட பேருந்து நுழைவுப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 கழிப்பிடங்கள், 14 கடைகள், 2 உணவகங்கள், 60 போ் அமரும் வகையில் காத்திருப்பு இருக்கைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நேரடி பேருந்து கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் அறிவிப்புகள், பொது வைஃபை, கைப்பேசி சாா்ஜிங் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா அணுகல், 30 எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளின் இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். அதைத்தொடா்ந்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பேருந்தில் பயணமும் மேற்கொண்டனா்.

முதல்வா் படைப்பகம்:

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட காந்தி நகா், மேற்கு மண்டலத்துக்குள்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகா் ஆகிய 2 இடங்களில் மாணவா்கள், இளைஞா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் தலா ரூ.3.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட முதல்வா் படைப்பகத்தையும் காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

இந்த இரண்டு படைப்பகங்களிலும் 48 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோா் படிக்கலாம் என்று, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →