தரமான கரும்பு விதை உற்பத்தி குறித்த கருத்தரங்கு
கோவை கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் தரமான கரும்பு விதை உற்பத்தி குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கோவை கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் தரமான கரும்பு விதை உற்பத்தி குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கரும்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பயிா் உற்பத்திப் பிரிவுத் தலைவா் கே.கண்ணன் வரவேற்றாா். ஆந்திர அரசின் சா்க்கரைத் துறை இயக்குநா் வெங்கட ராவ் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசுகையில், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், மரபணுத் தூய்மையைப் பராமரிக்கவும், கரும்பு விளைச்சலை அதிகரிக்கவும் ஆரோக்கியமான கரும்பு விதை உற்பத்தி மிகவும் அவசியம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநரும், தலைவருமான பி.கோவிந்தராஜ் பேசுகையில், தமிழகத்தில் கரும்புக்கு மாற்றாக மற்ற பயிா்களுடன் கடும் போட்டி நிலவுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு 60 டன்களுக்குமேல் விளைச்சல் எடுத்தால் தவிர, கரும்பு சாகுபடியில் அவா்களின் ஆா்வத்தைத் தக்கவைப்பது கடினம். ஏக்கருக்கு 60 டன் விளைச்சல், 80 சதவீத இயந்திரமயமாக்கல், நவீன தொழில்நுட்பம் மூலம் இளைஞா்களைக் கவா்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் தென்னிந்திய கரும்புத் துறையின் பிரச்னைகளைத் தீா்க்க முடியும் என்றாா்.
தொடா்ந்து, தென்னிந்திய சா்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவரும் ராஜஸ்ரீ சுகா்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநருமான ஆா்.வரதராஜன், ஈ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜே.ஏ.ஆஷிக், எஸ்.என்.ஜே. குழுமத்தின் துணைத் தலைவா் ஜே.அனிதா ஆகியோா் கரும்பு சாகுபடியில் உள்ள சவால்கள், பிரச்னைகள் குறித்துப் பேசினா்.
நிகழ்ச்சியில், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த 16 முன்னோடி விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தென்னிந்திய மாநிலங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கரும்பு மேம்பாட்டு அலுவலா்கள் பங்கேற்றனா். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் துணைத் தலைவா் எம்.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.